ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன?
சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நினைத்திருப்பீர்கள் இதோ அதன் இரகசியம். உலகில் மிக மிக அழகாக இருப்பதாக நாம் நினைக்கும் கட்டிடங்கள், ஓவியங்கள், சிலைகள் அனைத்திலும் ஒரு ‘பொன் விதி' இருப்பதை பலகாலமாகவே அழகியல் வல்லுநர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த பொன்விதியை பொன் விகிதம் என்றும் கூறுவார்கள்.
அகலத்தைவிட நீளம் ஒன்றரை மடங்கு இருந்தால் அது அழகாக இருக்கிறது. எகிப்திய பிரமிடாக இருந்தாலும், பார்த்தினான் மண்டபமாக இருந்தாலும் சோழர்கால கோயில் மண்டபங்களாக இருந்தாலும், சங்கின் சுருளாக இருந்தாலும் செயற்கை இயற்கை என்று பேதமில்லாமல் எல்லா அழகிய பொருள்களிலும் மேற்கூறிய பொன்விகிதம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.
இதன் இரகசியம் நமது பார்வையில் உள்ளது. நமது கண் உலகை ஒரு செவ்வகமாகத்தான் பார்க்கிறது. இடமிருந்து வலமாக பார்வை வரியோட்டம் செய்யும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அது பக்கவாட்டில் செல்வதில்லை. அவ்வாறே உயரத்திலும் அது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிப்பதில்லை. அந்த வரியோட்டம் மொத்தத்தில் ஒரு செவ்வகமாக, பொன் விகிதத்தில் அமைந்திருக்கிறது.
நாம் விலங்காக இருந்தபோது சுற்றுப்புறத்தை நோட்டம் விடும்போது ஆபத்துகளை நாம் பக்கவாட்டிலிருந்துதான் எதிர்பார்த்திருந்தோம். மேலிருந்தோ, தரையிலிருந்தோ அல்ல. எனவே நமது பார்வை அதிகமாக கிடைமட்டமான செவ்வகமாகவே அமைந்து விட்டது. அதனால் அந்த நீள அகல விகிதம் இயல்பான அழகாக நமக்குத் தெரிகிறது. அது நமது அழகுணர்வை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்துவிட்டது.
No comments:
Post a Comment