சூரியனை சுற்றி 67–பி என்ற வால் நட்சத்திரம் சுற்றிவருகிறது. இதை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி மையம் ரொசட்டா என்ற விண்கலத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து வால் நட்சத்திரத்தை அடைந்தது. அதில் இருந்து பிலே விண்கலம் தரை இறங்கிய பின்னர், பல்வேறு படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலபரப்பை துளையிட்டும் ஆய்வு செய்தது. மேலும் ஆய்வு பற்றிய தகவல்கள் விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், வால்நட்சத்திரத்தில் உயிர் வாழ்வதற்கான மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்பனை கொண்ட கரிம மூலக்கூறுகள் வால்நட்சத்திரத்தின் மேற்பகுதியில் படர்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
கரிமச் சோதனை மூலகங்கள் பற்றியத் தகவலைக் கண்டுபிடித்த ‘கொசக்‘ கருவியை ஆராய்ந்த முடிவுகளின் மூலம் இப்படியான வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு கிடைத்திருக்கக் கூடிய இரசாயன திண்மக் கட்டிகள் எவ்வாறு புவியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்பதை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 10 முதல் 25 செ.மீ கனமான தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டி படலமும் இறுக்கமாகப் படர்ந்திருது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி வால் நட்சத்திரத்தின் பெரும்பான்மையான மேற்பரப்பு நீரினாலான பனி படலத்தால் மூடப்பட்டுள்ளது என்றும், சிறிய அளவில் மேற்பரப்பில் ஒரு தூசியும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
சூரிய குடும்பத்தின் வெளிவட்டப்பாதையில் இருக்கக்கூடிய வெப்ப நிலை காரணமாக இந்த பனி நன்றாக இறுகி இருப்பதாகவும், அது மணற்கற்களின் அளவுக்கு திண்மமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த மூலக்கூறுகள் தான் உயிர்களை உருவாக்குவதாகும். பூமியில் கூட வால் நட்சத்திரம் அல்லது ஏதேனும் கோள்கள் மோதியதின் காரணமாக ஏற்பட்ட மாற்றத்தால் தான் உயிர்கள் தோன்றியிருக்க கூடும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது வால்நட்சத்திரத்தில் உயிர் மூலக்கூறுகள் இருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.
No comments:
Post a Comment