புதன் கிரகத்தில் மோதியது ‘மெசஞ்சர்’ விண்கலம்: 4 ஆண்டுகள் வெற்றிகரமான பயணம் முடிந்தது
புதன்கிரகத்தை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை புவிக்கு அனுப்பிய மெசஞ்சர் விண்கலம், புதன்கிரகத்தில் விழுந்து தன் இறுதிப்பயணத்தை நிறைவு செய்தது.
புதன் கிரகத்தை விரிவாக ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2004-ம் ஆண்டு மெசஞ்சர் விண்கலத்தைச் செலுத்தியது. இந்த விண்கலம் 2011 மார்ச் மாதம் புதன் கிரக சுற்று வட்டப்பாதையை அடைந்தது. புதன்கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்து, அதனைச் சுற்றி வந்த முதல் விண்கலம் மெசஞ்சர்தான். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டை மேற்கொண்ட மெசஞ்சர், புதன்கிரகத்தை வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களாக எடுத்து பூமிக்கு அனுப்பி வந்தது.
இதனிடையே இடையில் சில காலம் முடங்கியிருந்து மெசஞ்சர் மீண்டும் செயல்பட்டு வந்தது. தற்போது மெசஞ்சரின பணி நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி நேற்று இரவு 8.46 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.16) புதன்கிரகத்தில் மோதியது. மொத்தம் 513 கிலோ எடையுள்ள மெசஞ்சர் தனது வேகத்தை மெதுவாக இழந்தாலும், மணிக்கு 14,000 கி.மீ. வேகத்தில் மோதியது. புதன்கிரகத்தின் வடதுருவம் அருகே மோதி சுமார் 16 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தை மெசஞ்சர் தோற்றுவித்திருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
புதன்கிரகத்தில் அடர் வளிமண்டலம் இல்லாததால், அதனுள் நுழையும் பொருட்கள் உராய்வு காரணமாக பற்றி எரிவது மிகக் குறைவு. எனவே, மெசஞ்சர் முழுமையாக புதன் மீது மோதியது.
மெசஞ்சர் விண்கலம் இருமுறை தனது திட்டப் பயணத்தை நீட்டித்துகொண்டது. 2.70 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்களையும் 10 டெராபைட் அளவுக்கு அறிவியல் அளவீடுகளையும் அனுப்பி வைத்தது. புதன்கிரகத்தில் நீரால் ஆன பனிக்கட்டிகள் இருப்பதற்கான தடயத்தை மெசஞ்சர் கண்டுபிடித்தது.
புதன்கிரகத்தை மெசஞ்சர் 4,104 முறை சுற்றிவந்துள்ளது. அப்போது சிலசமயங்களில், புதனுக்கு மிக அருகில் அதாவது 300 முதல் 600 மீட்டர் தொலைவுக்குள் நெருங்கிச் சுற்றியுள்ளது.
எதிர்பார்த்ததை விட புதன் ஆய்வுத் திட்டம் மிக வெற்றி கரமாகவே முடிந்துள்ளது. புதனை, போதுமான விவரங் களுடன் வரைபடமாக மெசஞ்சர் தொகுத்துள்ளது.
சுருக்கமாகச் சொல்வதானால், புதனைப்பற்றி விஞ்ஞானிகள் தெரிந்துகொண்டிருக்கும் விரிவான தகவல்கள் அனைத் தையும் கண்டறிய உதவியது மெசஞ்சர்தான்.
தனக்கு அளிக்கப்பட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றி புதனுடன் ஐக்கியமாகி விட்டது மெசஞ்சர்.
No comments:
Post a Comment