என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday, 25 December 2017

யார், யாருக்கு கொடுத்தாங்கனு தெரியாது... அட, நம் அரசியல்வாதிகளுக்கு கை கொடுக்குமே பிட் காயின்!

ண்டைய காலத்தில் பண்ட மாற்று முறையில் ஆரம்பித்த வர்த்தகம், பின்னர் நாணய வர்த்தகமாக மாறுதல் அடைந்து, நாணயமும் கரன்ஸி நோட்டுக்களாக ஆனபின், அதுவும் முன்னேற்றம் கொண்டு கிரிடிட், டெபிட் கார்ட், டிராவலர்ஸ் செக் மற்றும் SODEXO PASS என்று பல முகம் காட்டி, கடைசியாக 'e trading'-ல் வந்து நின்றது. இதன் அடுத்தக் கட்ட முன்னேற்றம்தான் இந்த பிட் காயின்.

பெயர் ஒரு குறியீடு அல்ல. காயின் என்றே சொல்லப்பட்டாலும், இதற்கு வடிவம் கிடையாது. ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை கைகளில் வைத்து 'சர்...' என்று உதறிப்பார்ப்பது போல் செய்ய முடியாது அல்லது நாணயம் போல் கிணுகிணுத்து கொட்டி அள்ள முடியாது.


அப்படி என்றால் 'Virtual Currency'யா...?, இது என்ன புது கரன்ஸி...? அதாவது நாம் நம் ரூபாய், யூரோ, டாலர்... இப்படி எல்லாவித கரன்ஸிகளையும் வாங்கி, விற்க முடியும். அவற்றை கண்களால் பார்க்காமல், கைகளால் தொடாமல் 'e trading'. இப்படியான ஒரு கரன்ஸிதானே பிட் காயின் என்கிற கேள்விக்கு பதில்....

ஆமாம்... ஆனால், இல்லை! குழப்பமாக இருக்கிறதா?


ரூபாய், யூரோ, டாலர் இப்படி எல்லாவித நாணயங்களும் அந்தந்த நாட்டில் அச்சடிக்கப்படுகின்றன. இந்த அச்சடிப்பு, அந்நாட்டின் சென்ட்ரல் வங்கிகளினால் செய்யப்படுகிறது. நம் நாட்டை எடுத்துக்கொள்வோம். நம் கைகளில் உள்ள பணப்புழக்கம் குறைவதற்கோ, அதிகமாவதற்கோ வேண்டிய நடவடிக்கையை எடுப்பது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த பிட் காயினைப் பொறுத்தவரை யாராலும் மையப்படுத்தப்படவில்லை (centralized).


ஆகவே அதன் இருப்பு, தேவையைப் பொறுத்தே அமையும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வெளிநாட்டு டாலர் அளவைக்குறைக்க, வட்டி விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர போன்ற காரணங்கள் இதற்கு ஒத்து வராது. இந்த ஒன்றே பிட் காயின் பழக்கத்தில் வர முக்கிய காரணமாகும்.
சரி, நாட்டின் பொருளாதாரப் பிரிவு பிட் காயினை ஏற்படுத்தவில்லை. பின் அது எப்படி முளைத்தது?

மின்பொருள் உருவாக்கும் சடோஷி நாகாமோட்டோ என்பவரால், 2009-ம் ஆண்டு, கணித நிரூபணம் என்ற நோக்கில் மின்னணு கட்டண முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படை 'cryptography'.

(Cryptography is a method of storing and transmitting data in a particular form so that only those for whom it is intended can read and process it.)
அதாவது, நம் ரூபாயை எடுத்துக்கொள்வோம். அதன் அடிப்படை தங்கம் அல்லது வெள்ளி அல்லது டாலர் கையிருப்பு. நம் கையிருப்பை வைத்து அதற்கு உண்டான நாணயம்/கரன்ஸிதான் அச்சடிக்க முடியும். ஆனால், இந்த பிட் காயின்ஸ் என்பதே சில மின்னணுக்களின் மாறுதல்களே. ஆக, ஒரு கம்ப்யூட்டர் வழி உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் (software) இந்த வர்த்தகத்தின் நாடி.


கணித சூத்திரத்தில் உருவாக்கப்படுவதால், இதன் அடிப்படை தங்கமோ, வெள்ளியோ இல்லை. இந்த கணித சூத்திரத்தில் 21 மில்லியன் பிட் காயின்கள் வரைதான் உருவாக்க இயலும். ஆனால், ஒரு பிட் காயின் சிறு பாகமாக குறைக்கப்பட்டு, மிகச்சிறிய அளவான, one hundredth million of a bit coin உபயோகத்தில் உள்ளது. இது நம் ஆயிரம் ரூபாய் நோட்டை, ஆயிரம் ஒற்றை ரூபாயாக மாற்றுவது போல. இந்த மிகச்சிறிய அளவான பிட் காயின் பெயர் சடோஷி. இந்த கணித சூத்திரம் open source. அதாவது யார் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.


இந்த முறையில் பரிவர்த்தனை நடத்த ஒரு சமூகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தில் (community) யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். 


உங்களுக்கு இந்தக் கேள்வி எழலாம். பணம் புழக்கத்தில் இருக்கும் போது எதற்காக இந்த பிட் காயின்ஸ்? இதற்கான பதிலைப் பார்ப்போம்.

ஒரு பேமெண்ட் வங்கி ஆரம்பிக்கவேண்டுமானால் கூட ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை. வங்கியை விடுங்கள், அந்த வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்க நாம் சென்றால், பான் கார்டு, முகவரி அட்டை, ஒரு வழி மொழியாளர் இன்னும் பல விவரங்கள் கேட்கப்பட்டு, நாம் கணக்கு துவங்கும் போது சீனியர் சிட்டிசன் ஆக ஸ்டேட்டஸ் மாற்றும்படி ஆகிவிடும். ஆனால், இங்கே ஒரு கேள்வியும் கேட்கப்படுவதில்லை.

இது மட்டுமல்ல, ஒருவரே எவ்வளவு பிட் காயின் அட்ரஸ் வேண்டுமானாலும் ஏற்படுத்திக்கொள்ளலாம். முன்பெல்லாம் வருமான வரி ஏய்ப்புக்காக வைப்பு நிதிக்கணக்குகள் வேறு வேறு வங்கிகளில் துவக்கப்படும். ஆனால், இப்போது எல்லா வங்கிக்கணக்குகளும் பான் நம்பர் வைத்து அடையாளம் காணப்படுவதால், இந்த மாதிரியான வரி ஏய்ப்புக்கு வழி இல்லாமல் போய்விட்டது. இந்த பிட் காயின்சைப் பொறுத்தவரை இந்த தனி கணக்குகள் சிஸ்டம் தொடரப்படுகிறது. ஒன்றோடு ஒன்று இணைக்கப்படாது. இன்னும் சொல்லப்போனால் பெயர் முகவரி இப்படி ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. 



சரி, இந்த பிட் காயின் வாங்கி, விற்று, கையிருப்பு போன்றவற்றிற்கெல்லாம் அத்தாட்சி. நம் பாங்க் பாஸ்புத்தகம் போல ஒர் ஜெனரல் லெட்ஜர் உண்டு. இதன் பெயர் Block Chain. நாம் செய்யும் அத்தனை transactionகளும் இதில் கணக்கு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நாம் இதைப்பார்க்க முடியும். இந்த லெட்ஜர் triple எண்ட்ரி முறையைப் பயன்படுத்துகிறது. நம் double entry முறையை விட பாதுகாப்பானது என்று கூட சொல்லலாம்.


கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், வங்கியில் நாம் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறைக்கும் சர்வீஸ் சார்ஜ் ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த பிட் காயின் முறையில் எந்த கூடுதல் வசூலிப்பும் கிடையாது. ஆனால், பிட் காயினில் ஒரு முறை அனுப்பிவிட்டால் அதை ரத்து செய்ய இயலாது. டிடி போல் ரத்து வசதிகள் இதில் கிடையாது.
சரி Crypto currency, அதாவது cryptography வழியாக உருவாக்கப்பட்டு, அதன் வழியே கட்டுப்படுத்தப்படும் ஒரு நாணயம் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

இந்த பிட் காயின் ஒரு சாதாரண பயனீட்டாளர் பார்வையில் ஒரு மொபைல் App. ஒரு சொடக்கிட்டு பணம் அனுப்பி விடலாம் ஆனால், இந்த கம்ப்யூட்டர் புரோகிராம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிட் காயினின் வாலெட் (wallet) ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நாம் பிட் காயின் வாங்கலாம், விற்கலாம், கொடுக்கலாம். இப்படி பணம் பெற அல்லது அனுப்ப உப்யோகப்படுத்த வேண்டியது டிஜிட்டல் கையெழுத்து. இப்படி உபயோகப்படுத்தும்போது சில specialized hardware உபயோகப்படுத்தினால் அதற்கு வெகுமதியாக சில பிட் காயின்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு கொடுப்பதற்கு mining என்று பெயர். அட இது வேற ஒண்ணும் இல்லை... இப்ப உங்க டெபாசிட்டை சில கம்பெனிகள் மூலமாகப் போட்டால் இன்சென்டிவ் என்னும் ஊக்கத்தொகை கிடைக்குமல்லவா, அது போலத்தான்!



இந்த பிட் காயின்களை எப்படி வாங்க முடியும்?

1. வாங்கும் பொருட்களோ, சேவைகளுக்கோ, அதற்கான விலையாக கொடுக்கும்போது.

2. பிட் காயின் சந்தையில் நேரடியாக வாங்க முடியும்.

3. தெரிந்தவரிடம் பணத்திற்கு மாற்றாக பெறமுடியும்.

முதலில் சொன்னது போல competetive mining. இந்த பிட் காயின் மார்க்கெட்டும் நம் கரன்ஸி மார்க்கெட் போலத்தான். பிட் காயினின் விலையை நிர்ணயிப்பது டிமாண்ட் சப்ளை சுழற்சிதான். தேவை அதிகமாக இருந்தாலோ அல்லது இருப்பு குறைந்தாலோ, விலை ஏறும்.


பிட்காயின் வருமானவரிக்கு உட்பட்டவைதான். ஆனால், நம் நாட்டு வரி சட்டத்தில் இன்னும் கொண்டு வரப்படவில்லை. அதனால் இது பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.

சட்டப்படி பிட் காயின் குற்றமா, சட்ட விரோதமா என்றால், அர்ஜெண்டினா, ரஷ்யா போன்ற சில நாடுகளில் இவற்றைத்தடை செய்திருக்கிறார்கள். நம் நாட்டில் இது பற்றி பேசப்பட்டாலும் இன்னும் தடை விதிக்கப்படவில்லை.

சரி இந்தக் கட்டுரைக்கான முக்கியமான காரணத்திற்கு வருவோம். சில  மாதம் முன்பு வந்த செய்தியில், மைசூரில் நிறுவனம் ஒன்றில், கம்ப்யூட்டர் க்ராஷ் ஆகிவிட, அதை சரி செய்ய ஒரு 'சாவி' தேவைப்பட்டது. ஆனால், அதற்கு நிறையப்பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்று பிளாக்மெயில் செய்யப்பட்டு, அந்தப்பணம் பிட் காயினாக கொடுக்கப்பட்டது.

இதில் என்ன புதுசு என்றால், இவை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டன என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. தற்போது நடக்கவிருக்கும் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். தெருவில் பெட்டியில் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஆனால் பிட் காயினாகக் கொடுத்தால், யார் யாருக்கு எப்போது கொடுத்தார்கள் என்பதை சைபர் கிரைம் கூட கண்டுபிடிக்க முடியாது.


ஆக, பிட் காயின் புழக்கத்தில் வந்தால் அவை சட்ட விரோதச்செயல்களுக்கு அதிகமாக பயன்படலாம். இதற்கான தனி பாதுகாப்பு சட்டம் தேவை.

No comments:

Post a Comment