என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 9 August 2016

கொலைக் குற்றவாளிக்கு பூ மாலை! நானாவதி கொலை வழக்கு.

ருவன் ஒரு கொலை செய்கிறான். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அவன் வரும்போது அவன் மீது பூக்கள் அள்ளி வீசுகிறார்கள். பல இளம்பெண்கள் அவனை திருமணம் செய்ய தயார் என்கிறார்கள். என்ன, கற்பனையான சினிமா காட்சிகள் போல இருக்கிறதா? இவை அத்தனையும் நிஜத்தில் நடந்தவை! அதுவும் இந்தியாவில்.

ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?


1959-ம் வருடம் நடந்த சம்பவம் அது. கவாஸ் மானெக் ஷா நானாவதி இந்திய கப்பல் படைத் தளபதி. அவன் பார்ப்பதற்கு மன்மதன் மாதிரி தான் இருப்பான். அதுவும் அந்த ராணுவ சீருடையில் நானாவதி ரொம்பவும் கம்பீரமாக இருப்பான். கப்பல் படையில் முக்கியமான பொறுப்பில் இருந்தான். அதனால் இந்திய ராணுவ அமைச்சகத்தின் உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தான். ராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனன் லண்டன் சென்ற போது நானாவதியும் சென்றான். நானாவதி வகித்திருந்த உயர் பதவியின் காரணமாக நேரு குடும்பத்தாரிடம் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது நட்பாக மாறியது.

இப்படியிருந்த சூழ்நிலையில் தான் உத்தியோக நிமித்தமாக லண்டனுக்கு சென்ற நானாவதிக்கு சில்வியாவின் அறிமுகம் கிடைத்தது. 18 வயதான சில்வியா, 24 வயதான நானாவதியை சந்தித்தார். சினிமாவில் வருவது போல் சந்திப்பு காதலாக மாறியது. நானாவதி தன்னுடைய ராணுவப் பணியின் போது கடல் பிரயாணத்தில், தான் சந்தித்த வீர தீர சாகசங்களையெல்லாம் சொல்லக் கேட்ட சில்வியா சிலிர்ப்புற்றாள். நானாவதி இந்தியா திரும்பும் முன்னர், சில்வியாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்று கேட்டான். சம்மதம் தெரிவித்த சில்வியாவுக்கும் நானாவதிக்கும் இங்கிலாந்தில் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

Kawas Nanavati
நானாவதி, சில்வியா திருமணம் 1949 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு புது மணத் தம்பதியினர் இந்தியாவுக்குத் திரும்பினர். பம்பாயில் குடி புகுந்தனர். நானாவதி, சில்வியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததன. இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. இந்நிலையில், நானாவதி-சில்வியா தம்பதியரின் அமைதியான வாழ்க்கையில் அகுஜா என்ற புயல் வீச ஆரம்பித்தது.

Sylvia Nanavati
அகுஜா! இவன் ஒரு பணக்காரன். யுனிவர்சல் மோட்டார் நிறுவனத்தின் மேலாளர். அந்நாளைய ரோமியோ. மிடுக்கான தோற்றம், பெண்களைக் கவரும் வசீகரப் பேச்சு. பெண்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் இவனுக்குத் தாங்காது. பெண்களுடைய கஷ்டத்தைக் காதுகொடுத்து கேட்பான். இதைத்தான் பல ஆண்கள் தங்கள் மனைவியுடன் செய்ய தவறி விடுகின்றனர். இவனுடைய கரிசனத்தை பார்த்த பெண்கள் கரைந்து போய் உருகி விடுவர் அல்லது உருகிப் போய் கரைந்து விடுவர்.

அகுஜாவின் முக்கிய வேலையே பார்ட்டிக்கு போவதுதான். அதுவும் பெரிய இடத்துப் பார்ட்டிகள். முக்கியமாக ராணுவத்தினருக்காக நடக்கும் விருந்துகள். அங்கு தான் அகுஜாவுக்கு பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பேரிடம் அவனுக்கு நெருங்கிய தொடர்பும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படித்தான் அகுஜாவுக்கு சில்வியாவுடனான சந்திப்பு ஏற்பட்டது. அகுஜாவும் நானாவதியும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்கள். நானாவதி, சில்வியா, அகுஜா, அகுஜாவின் சகோதரி மாமேயி அனைவரும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தனர். உல்லாசமாக காலத்தை கழித்தனர்.

ahuja
நானாவதியின் துரதிர்ஷ்டம் அவனால் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்க முடியாது. அவனுடைய உத்தியோகம் அப்படி. வருடத்தில் பாதி மாதங்கள் அவன் ராணுவக் கப்பலில் இருந்தாக வேண்டும். விடுமுறை நாட்களில் தான் அவன் குடும்பத்தாருடன் இருக்க முடியும். சில்வியாவோ தன்னுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு தனக்கு பரிச்சயம் இல்லாத வேறொரு நாட்டில் குடி புகுந்திருக்கிறார். கணவன் தான் தனக்கு சொந்தம், கணவன் இல்லாத சமயத்தில் தன்னுடைய சுற்றம் வெறிச்சோடியிருக்கும். அவரச ஆபத்துக்குக் கூட ஆறுதல் சொல்ல சொந்தம் கிடையாது. இந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட அகுஜா சந்தர்ப்பத்தை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டான். சில்வியாவுடன் நட்பாகப் பழகினான். நட்பு சில நாட்களில் காதலாக மாறியாது. இருவரும் நானாவதி இல்லாத சமயத்தில் கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். அகுஜா இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளானாள் சில்வியா. அகுஜாவிடம் நானாவதியை விவாகரத்து செய்துவிட்டு அவனுடன் வந்துவிடுவதாக சொன்னாள். தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டாள், வற்புறுத்தினாள்.

அகுஜா இப்பொழுது பின் வாங்கினான். சில்வியாவை சமாதானப் படுத்தினான். நாம் ஒரு மாத காலம் சந்திக்காமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் நம்முடைய உண்மையான காதல் வெளிப்படும் என்று ஏதோ சாக்கு போக்கு கூறினான். அப்பொழுதுதான் சில்வியாவுக்கு உண்மை புரிந்தது. தான் ஏமாந்து விட்டோம் என்று உணர்ந்தாள்.

சிறிது நாட்களில் தன்னுடைய விடுமுறை நாட்களை குடும்பத்தாருடன் செலவிட வீடு திரும்பினான் நானாவதி. வீட்டுக்கு வந்த நானாவதிக்கு சில்வியாவின் செயல்பாடும் பேச்சும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சில்வியாவிடம் பெரும் மாறுதல். அவள் பட்டும் படாமல் இருந்தாள். நானாவதி, விஷயம் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள சில்வியாவை தோண்டித் துருவினான். இறுதியாக சில்வியா நடந்த விவரத்தை நானாவதியிடம் தெரிவித்தாள்.

சில்வியா வெடித்து அழுதாள். மெதுவாக சொன்னாள், “நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன்…’’ நானாவதி அதிர்ந்தான்.

சில்வியாவின் தனிமையை நானாவதியின் 15 வருட நண்பனும், தொழிலதிபருமான அகூஜா பயன்படுத்திக் கொண்டதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய காதல் வலையில் விழுந்துவிட்டதாகவும் அவள் சொன்னாள். நானாவதி நடந்ததைக் கேட்டு மிகவும் அதிர்ந்தான்.... வருந்தினான்....

தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி, “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்…’’ என்றான். சில்வியா துடித்தாள். “நான் செய்த தப்புக்கு நீங்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?’’ என்று அவனை சமாதானம் செய்தாள்.

நிலைமையை உணர்ந்து கொண்ட நானாவதி நடைமுறைக்கு சாத்தியமான ஒரு முடிவை தீர்மானித்தான்.


சில்வியாவையும், குழந்தைகளையும் சினிமா தியேட்டருக்கு அழைத்து சென்றான். அவர்களை அங்கு படம் பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் எங்கே செல்கிறான் என்று சில்வியா கேட்டதற்கு, நீங்கள் படம் பார்த்து முடியுங்கள் நான் திரும்பி வந்து கூட்டிச் செல்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு தியேட்டரை விட்டுச் சென்றான்.

நானாவதி தன்னுடைய கப்பலுக்கு சென்றான். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கப்பலின் ஆயுத கிடங்குக்குள் சென்றான். அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். மேலும் தேவையான அளவு தோட்டாக்களை எடுத்துக் கொண்டான். பின்னர் அவன் அகுஜாவின் அலுவலகத்துக்குச் சென்றான். நானாவதி சென்ற நேரம் மதிய வேளை. அகுஜா அங்கு இல்லை. அகுஜா வீட்டுக்குச் சென்றுவிட்டதாக அவனுடைய சிப்பந்தி தெரிவித்தான். நானாவதி அகுஜா வீட்டிற்குச் சென்றான். அகுஜா அப்போதுதான் குளித்து விட்டு, டவலுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.

நீ சில்வியாவை திருமணம் செய்து கொண்டு அவளது குழந்தைகளை பார்த்துக் கொள்வாயா என்று நானாவதி அகுஜாவைப் பார்த்துக் கேட்டான். என் கூட படுத்திருந்த ஒவ்வொரு பெண்ணையும் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்று பதிலுக்கு கேட்டான் அகுஜா. அங்கு உடனே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இரண்டு நொடிகளுக்குள்ளாக மூன்று தோட்டாக்கள் அகுஜாவின் உடலில் பாய்ந்தது. அகுஜா உயிரிழந்தான். அகுஜா கொலை சம்பவத்தின் போது நானாவதி, அகுஜாவைத் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

நானாவதி கப்பல் படையில் தன்னுடைய தலைமை அதிகாரியைச் சந்தித்து தான் ஒரு கொலை செய்து விட்டதாக தெரிவித்தான். அந்த அதிகாரி காவல்துறையினரிடம் சரண் அடையுமாறு கூறினார். நானாவதி மும்பை காவல்துறை துணை ஆணையரிடம் நடந்த விவரத்தை தெரிவித்து சரண் அடைந்தான். காவல் துறை வழக்குப் பதிவு செய்து, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.


நீதிமன்றத்தில் நீதிபதி ரதிலால் பாய்சந்த் மேத்தா, நானாவதியைப் பார்த்து நீ உன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு, நானாவதி நான் குற்றம் இழைக்கவில்லை என்று கூறினான். விசாரணை ஆரம்பமானது. நானாவதி கொலை வழக்கில், 9 நபர் கொண்ட ஜூரி (நடுவர் குழு) அமைக்கப்பட்டது. 9 ஜூரிகளுடன் வழக்கின் விசாரணை தொடங்கியது. (சமூகத்தில் பல துறைகளில் இருந்த கண்ணியமான நபர்கள் நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வழக்கின் விசாரணயைக் கவனித்து இறுதியில் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக நீதிபதிக்கு தெரிவிப்பார்கள். இந்த ஜூரிகளுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.) நானாவதி வழக்கில் பெரிய சிக்கல் இல்லை. அது திட்டமிட்ட கொலையா அல்லது திட்டமிடாத கொலையா என்பது மட்டுமே தீர்மானிக் கப்பட வேண்டும். நானாவதி கோபம் தூண்டப்பட்டு ஆத்திரத்தால் அறிவை இழந்து சந்தர்ப்ப வசத்தால் அகுஜாவை கொலை செய்தானா (Culpable homicide not amounting to murder) அல்லது அகுஜாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு கொலை (Preplanned murder) செய்தானா என்று ஜூரி முடிவு செய்ய வேண்டும். நானாவதி சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்தான் என்று முடிவு செய்யப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் (இ.பி.கோ 304 ஆம் பிரிவு). திட்டமிட்டு கொலை செய்தான் என்று முடிவானால் நானாவதிக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் (இ.பி.கோ 302 ஆம் பிரிவு).



நானாவதியின் வாக்குமூலம்: “நான் தற்கொலை செய்துகொள்ளவே துப்பாக்கி வாங்கினேன். எனக்குப் பிறகு என் மனைவி, மற்றும் குழந்தைகளின் கதி என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அகூஜாவைப் பார்க்கப் போனேன்.

அப்போதுதான் குளித்துவிட்டு அறைக்குள் வந்த அவனிடம், “என் மனைவியை நீ திருமணம் செய்து கொண்டு, என் குழந்தைகளை ஏற்றுக்கொள்வாயா?’’ என்று கேட்டேன். அதற்கு அவன், “நான் படுத்த எல்லா பெண்களையும் திருமணம் செய்துகொள்ள முடியுமா?’’ என்று கேட்டதோடு, என் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க வந்தான். அந்தப் போராட்டத்தில் துப்பாக்கி வெடித்தது.

அரசுத் தரப்பில் நானாவதி திட்டமிட்டுதான் அகுஜாவை கொலை செய்தான் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இல்லை நானாவதி சந்தர்ப்பவசத்தால் தான் அகுஜாவை கொலை செய்தான் என்று அவனுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். கரல் கண்டல்வாலா என்ற பார்சி வழக்கறிஞர் நானாவதிக்காக ஆஜரானார். பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அரசு தரப்புக்கு ஆதரவாக வாதாடினார். வழக்கு விசாரணையில் பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த பிறகு ஜூரி 8:1 என்ற விகிதத்தில் நானாவதி குற்றமற்றவர், நிரபராதி என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.

9 ஜூரிகளில் 8 பேர், ‘இது திட்டமிட்ட கொலை அல்ல’ என்றும், ஒரே ஒரு ஜூரி ‘இது திட்டமிட்ட கொலைதான்’ என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.

அமர்வு நீதிபதி ஜுரியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவ்வழக்கை பாம்பே உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை வேண்டி அனுப்பி வைத்தார்.

Mumbai high court
பாம்பே உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணையில் தகுந்த முறையில் வழிகாட்டவில்லை.

1. குறிப்பாக அகுஜாவை சுட்டது தற்செயலான விஷயம்தான், அது திட்டமிட்டு செய்யப்படவிலை என்று நிரூபிக்க வேண்டியவன் நானாவதி. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.

2. அகுஜாவை கொல்வதற்கு, நானாவதிக்கு சந்தர்ப்பவச தூண்டுதல் எப்பொழுது ஏற்பட்டது? சில்வியா நானாவதியிடம் உண்மையை சொன்ன போதா அல்லது நானாவதி அகுஜாவை அவனுடைய இல்லத்தில் சந்தித்தப் போதா?

3. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் தருவாயில் தூண்டுதல் (Provocation) என்பது சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைக்கத் தூண்டும் காரணி கொலை செய்தவரிடமோ அல்லது கொலை செய்யப்பட்டவரிடமோ தான் வரவேண்டிய அவசியம் இல்லை மூன்றாவது நபரிடமிருந்து கூட வரலாம் என்று தவறாக வழிகாட்டியுள்ளார்.

4. நானாவதி குற்றவாளி இல்லை என்று நியாயத்துக்குட்பட்ட ஒரு சாதரண மனிதனுக்குக் கூட ஐயம் திரிபுர நிரூபிக்கப்பட வேண்டும்.

இவை நான்கும் ஜூரியின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த உயர் நீதிமன்றம், ஜூரியின் முடிவைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கை மறுவிசாரணை செய்ய, தானே முன் வந்தது.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் நானாவதி தரப்பிலிருந்து, சந்தர்ப்பவசத்தால்தான் கொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கு பின் வரும் வாதம் முன்வைக்கப்பட்டது. நானாவதி அகுஜாவை அவனது இல்லத்தில் சந்தித்து, சில்வியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அதற்கு அவன் தன் கூட படுத்திருந்த பெண்களை எல்லாம் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியபடியே, காக்கி கவரில் வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுக்க எத்தனித்தான். அதை யூகித்துக்கொண்ட நானாவதி அகுஜாவை தடுப்பதற்காக முயன்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நிகழ்ந்து விட்டது. அகுஜா உயிரிழந்தான்.



அரசுத் தரப்பு மறுத்தது. நானாவதிக்கும் அகுஜாவுக்கும் துப்பாக்கியைப் பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அகுஜா இடுப்பில் கட்டியிருந்த துண்டு கீழே அவிழ்ந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. சில்வியா தனக்கும் அகுஜாவுக்கும் ஏற்பட்ட உறவை பற்றி சொல்லிய பிறகும் எந்த வித சலனுமும் இல்லாமல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை சினிமா தியேட்டரில் கொண்டு விட்டு, தன்னுடைய கப்பலுக்குச் சென்று ஆயுத கிடங்கிலிருந்து போலியான காரணத்தை சொல்லி அங்கிருந்து கைதுப்பாக்கியையும் தேவையான தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு நிதானமாக அகுஜாவின் வீட்டுக்கு நானாவதி சென்றுள்ளான். மேலும் அகுஜாவின் வேலைக்காரர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மூன்று தோட்டாக்கள் காலதாமதமின்றி அடுத்தடுத்து சுடப்படும் சத்தம் கேட்டதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளான். அகுஜா சுடப்பட்ட பிறகு நானாவதி அகுஜா வீட்டிலிருந்து செல்லும்போதுகூட, அங்கிருந்த அகுஜாவின் சகோதரியிடம் நடந்தது விபத்து என்று கூட தெரிவிக்காமல் சென்றுவிட்டிருக்கிறான். கப்பல் படை தலைமை அதிகாரியிடமும், காவல் துறை துணை ஆணையரிடமும் நான் தான் அகுஜாவைக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான். இந்தச் செயல்களை வைத்து பார்க்கும்பொழுது நானாவதி சந்தர்ப்பவசத்தால் அகுஜாவைக் கொன்றிருக்கிறான் என்று எப்படி சொல்லமுடியும்?


அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நானாவதியை குற்றவாளி என்று அறிவித்து, ஆயுள் தண்டனை அளித்தது. நானாவதி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இதற்கிடையில் பாம்பே மாகாண ஆளுநரான விஜயலட்சுமி பண்டிட், நீதிமன்றத் தீர்ப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவனை கப்பல் படையின் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இச்செயல் நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒரு பூசலை ஏற்படுத்தியது. இறுதியில் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. நானாவதி சிறையில் அடைக்கப்பட்டான்.


இந்த வழக்கின் விசாரணையின் போது கோர்ட்டுக்கு அவன் வரும் போதுதான் பூக்களும், ரூபாய் நோட்டுக்களும் வீசப்பட்டன. சில பெண்கள் ரூபாய் நோட்டுக்களில் லிப்ஸ்டிக் முத்தம் பதித்து வீசினார்கள். நானாவதி பயன்படுத்தியது போன்ற பொம்மைத் துப்பாக்கிகளும் அகூஜா கட்டியிருந்ததைப் போன்ற டவல்களும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணைச் செய்திகளை விடாமல் வெளியிட்டு வந்த ‘பிளிட்ஸ்’ பத்திரிகை அப்போது மட்டும் ரூபாய் இரண்டுக்கு விற்பனையானது (அதன் விலை 25 பைசாதான்). ‘பிளிட்ஸ்’ பத்திரிகை நானாவதியைப் பகிரங்கமாக ஆதரித்தது. “இப்படி உங்கள் குடும்பத்தில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?’’ என்று வாசகர்களைக் கேள்வி கேட்டது. கவர்னருக்கு மன்னிப்புக்கோரும் மனுவை பத்திரிகையில் வெளியிட்டு, அதில் கையெழுத்திட்டு அனுப்பச் சொன்னது.


பெரும்பான்மையான மக்கள் நானாவதிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். சில்வியா மட்டுமில்லாமல் பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுடன் தொடர்பு வைத்திருந்த அகூஜா கொல்லப்பட வேண்டியவனே என்று மக்கள் வாதிட்டார்கள். ஊர்வலம் சென்றார்கள்.
நானாவதிக்கு மக்கள் ஆதரவு இருந்தது. மக்கள் நானாவதி செய்தது சரியே என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். கூடவே நானாவதிக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. இதன் காரணமாக நானாவதிக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க எத்தனித்தது இந்திய அரசு. ஆனால் அப்படி விடுதலை செய்தால் சிந்தி சமுதாயத்தைப் (கொலையுண்ட அகுஜா சிந்தி சமுதாயத்தை சேர்ந்தவன். கொலை செய்த நானாவதி பார்சி சமுதாயத்தை சேர்ந்தவன்.) பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. முடிவாக அரசாங்கத்துக்கு ஒரு யோசனை தோன்றியது.

பாய் பிரதாப் ஒரு சிந்திக்காரர். இவர் ஒரு வியாபாரி. முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவர் தன்னுடைய வர்த்தகத்துக்காக அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை துஷ்பிரரோயகம் செய்திருக்கிறார். அதன் காரணமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாய் பிரதாப்பை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்வதன் மூலம், நானாவதியை விடுதலை செய்வதில் ஏற்படும் சிந்தி சமுதாயத்தினரின் எதிர்ப்பை சமாளித்துவிடலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவெடுத்தது.

நானாவதி சிறைக்குச் சென்று மூன்றாண்டுகள் தான் ஆகியிருக்கும். நானவதியும், பாய் பிரதாப்பும் ஒரு சேர 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலையான பிறகு நானாவதி, மனைவி சில்வியா மற்றும் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை விட்டு விட்டு கனடா நாட்டில் குடி புகுந்தான். அங்கேயே வாழ்ந்து 2003-ல் இறந்து போனான்.

நானாவதி வழக்கின் அடிப்படையில் சுனில்தத், வினோத்கன்னா நடித்த பல ஹிந்தி திரைப்படங்களும், நாடகங்களும், புத்தகங்களும் வந்தன. 40 வருடங் கள் கழித்து ‘ஹிந்துஸ்தான்’ டைம்ஸ் பத்திரிகை ஒரு சிறப்புக் கட்டுரைக் காக நானாவதியைத் தொடர்புகொண்டது. அவன், “உங்களுக்கு இது சுவாரசியமான கதை. எனக்கு என்வாழ் வில் மறக்க வேண்டிய அத்தியாயம். மன்னிக்கவும்!’’ என்று பதில் எழுதினான்.


அன்று நானாவதிக்கு எதிராக தீர்ப்பளித்த ஜூரி பியர்ஸுக்கு 2009-ல் 102 வயது. அவரைக் கேட்டபோது, “நானாவதி நல்லவன். ஆனால், கொலை கொலைதானே? எதிர்த்து தீர்ப்பு சொன்னது நான்தான் என்று தெரிந்திருந்தால், மக்கள் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே என்னைக் கொன்றிருப்பார்கள்’’ என்றார்.
இந்த வழக்கு இந்தியாவில் முக்கிய மான வழக்காக மாறியதற்கு மற்றும் ஒரு காரணமும் உண்டு. இந்த வழக்கு தான் ஜூரிகள் கலந்துகொண்ட கடைசி வழக்கு. மீடியா மற்றும் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாகவே ஜூரிகளின் தீர்ப்பு அமைந்து வந்ததால் இந்திய அரசு இந்த வழக்கோடு ஜூரி முறையை ஒழித்தது.

No comments:

Post a Comment