என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Tuesday, 24 May 2016

இஸ்ரோவின் புதிய முயற்சி: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மறு பயன்பாட்டு விண்கலம்.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மறு பயன்பாட்டு விண்கலம் சோதனை முயற்சியாக நேற்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


இது குறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "மறு பயன்பாட்டு விண்கலம் (ஆர்எல்வி - டிடி- RLV—TD HEX—01 ) வெற்றிகரமாக ஏவப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

இதனையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மறு பயன்பாட்டு விண்கலம் - சில முக்கிய தகவல்கள்:

செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ராக்கெட் ஒருமுறை பயன்பாட்டுடன் முடிந்துவிடும்.

இதை தவிர்க்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் 'ரீயூசபிள் லாஞ்சிங் வெஹிகிள் - டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்' (ஆர்எல்வி - டிடி- RLV—TD HEX—01 ) என்ற பெயரில் புதிய விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.


முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் எஸ்யூவி காரின் அளவு மற்றும் எடை அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.


பூமியில் இருந்து 70 கி.மீ. உயரத்தில் பறக்கவிட்டு தரை தள விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின் படி வங்கக் கடல் பகுதியில் விண்கலத்தை மீண்டும் இறக்க முடிவு செய்யப்பட்டது.


விஞ்ஞானிகளின் கடின உழைப்பில் ரூ.95 கோடி செலவில் உருவான இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும்போது உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கும் திறன்கொண்டது. இதற்காக விண்கலத்தின் வெளிப்புறத்தில் வெப்பம் தாங்கும் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த விண்கலத்தின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளதால், இனி வருங்காலங்களில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி
தி ஹிந்து தமிழ்.

No comments:

Post a Comment