என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 18 May 2016

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் விண்கலம் 23-ல் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ சோதனை முயற்சி

  மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில், புதிய விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
புதிய விண்கலம் வரும் 23-ம் தேதி காலை விண்ணில் பாய்கிறது.

செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ராக்கெட், விண்ணில் 4 நிலைகளாக தனித்தனியாக கழன்று சென்று விடும். அதன்பின் செயற்கை கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். பல கோடி ரூபாய் செலவில்
தயாரிக்கப்படும் ராக்கெட் ஒரு முறை பயன்பாட்டுடன் முடிந்துவிடும்.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் ‘ரியூசபிள் லாஞ்சிங் வெய்கிள்(reusable launch vehicle) - டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்’ (ஆர்எல்வி - டிடி) என்ற பெயரில் புதிய விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் எஸ்யூவி காரின் அளவு மற்றும் எடை அளவுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலத்தை சோதித்து பார்ப்பதற்கான கவுன்ட்டவுன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 23-ம் தேதி காலை 9.30 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சோதனை வெற்றி பெற்றால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் விண்கலத்தின் மூலம், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும்.


ஏற்கெனவே, குறைந்த செலவில் செயற்கை கோள்களை வடிவமைத்து இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. இதனால் மற்ற பல நாடுகளும் தங்கள் செயற்கை கோள்களை இஸ்ரோ மூலம் அனுப்பி வருகின்றன. இதற்கு அமெரிக்காவின் பல நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘மறுபடியும் பயன்படுத்தும் வகையிலான இந்த விண்கல சோதனை வெற்றி பெற்றால், செலவு 10 மடங்கு குறைந்துவிடும். அதன்பின் ஒரு கிலோ எடையுள்ள பொருளை விண்ணில் சுமந்து செல்ல 2000 டாலர் மட்டுமே செலவாகும்’’ என்றனர்.



அமெரிக்காவின் விண்கலத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது ஆர்எல்வி-டிடி விண் கலம். அமெரிக்கா தனது விண் கலத்தை 135 முறை விண்ணில் செலுத்தி மீண்டும் தரைக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது.
அதன்பின் 2011-ம் ஆண்டு முதல் விண்கலம் செலுத்துவதை நிறுத்தி விட்டது. அதன்பின் 1989-ல் ரஷ்யா ஒரு முறை விண்கலத்தை செலுத்தியது. பிரான்ஸ், ஜப்பான் நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டன. சீனா இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை.


ராக்கெட் மற்றும் விமானத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் மொத்தம் 17 மீட்டர் நீளம் உடையது. இதன் முதல் பகுதி சாலிட் புரோபலன்ட் பூஸ்டர் ராக்கெட்டாகவும், 2-ம் பகுதி 6.5 மீட்டர் நீளம் கொண்ட விமானத்தின் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு ராக்கெட்டின் உச்சியில் அமர்ந்திருக்கும் விமானம் போல இருக்கும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள ஆர்எல்வி டிடி விண்கலத்தின் முதல் பகுதி 9 டன் எடை கொண்டது. அதாவது 1980களில் விண்ணில் ஏவப்பட்ட எஸ்எல்வி 3 ராக்கெட்டை போன்ற எடையில் இருக்கும். முதலில் பூமியில் இருந்து ராக்கெட்டை போல இந்த விண்கலம் புறப்படும். அதன் பின் விண்ணில் 70 கி.மீ தூரத்தைத் தொட்டதும் ஆர்எல்வியின் பூஸ்டர் பிரிந்து விண்கலம் தனியாக பறக்கும்.


இதுகுறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.சிவன் கூறுகையில், ‘‘ஹனுமான் போன்று விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னர் இதுபோன்ற முயற்சிகள் குழந்தை முதல் முதலாக எடுத்து வைக்கும் சிறிய அடியை போன்றது’’ என்றார்.


இந்த விண்கலம் தயாரிக்க மத்திய அரசு 95 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. ஐந்து ஆண்டு கடின உழைப்பில் இதை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த விண்கலம் விண்ணில் இருந்து பூமிக்கு அதிவேகத்தில் திரும்பும் போது காற்றுடன் ஏற்படும் உராய்வில் அதிக வெப்பம் ஏற்படும். அதை தடுக்க விண்கலத்தின் வெளிப்புறத்தில் வெப்ப தடுப்பு ஓடுகள் பதிக்கப் பட்டிருக்கும். இந்த ஓடுகள் சேதம் அடைந்து அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் கடந்த 2003-ம் ஆண்டு வெடித்து சிதறியது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்பனா சாவ்லா இறந்தார்.


இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க ‘தெர்மல் மேனேஜ்மென்ட்’ விஷயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சிகள் செய்து புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்
தி ஹிந்து தமிழ்.

No comments:

Post a Comment